ரூ.2,000 கோடி நிதியுடன் ‘வெற்றி’ மடிக்கணினி திட்டம்; தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்
தமிழக சட்டசபையில் 2026–27 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்து பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை அறிவித்தார்.
அதன்படி, ‘வெற்றி’ மடிக்கணினி திட்டம் செயல்படுத்த ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 2031-ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான திறன் பயிற்சி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கான இருசக்கர மிதிவண்டி திட்டத்திற்கு ரூ.277 கோடி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,150 கோடி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.2,022 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1,051 கோடி வழங்கப்பட்டுள்ளதுடன், அனைத்து இளைஞர்களுக்கும் விளையாட்டு வாய்ப்புகளை உருவாக்குவது அரசின் நோக்கம் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.விளையாட்டு துறையை மேம்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் ரூ.50 கோடி செலவில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.
தேசிய அளவில் சிறந்து விளங்கும் 500 வீரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதுடன், பள்ளிகளில் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரப் பயிற்சி அளிக்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழரின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை நடத்த ரூ.42 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு கிராமிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.131 கோடி, ‘மண்ணின் மகள்’ திட்டத்திற்கு ரூ.20 கோடி, அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.300 கோடி, ஆன்றோர் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.250 கோடி மற்றும் ஆதிதிராவிடர் தொழில்முனைவோர் திட்டத்திற்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.