முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்: அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு
தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னையில் நடைபெறும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டு வர முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதையடுத்து, தொகுதி மறுவரையறை பணிகள் மற்றும் அதன் தாக்கம் குறித்து விவாதிப்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த முதல்-அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.சென்னை கலைவாணர் அரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் தலைமை வகிக்கிறார். மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூலம் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்க மாட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தம்பிதுரை, இன்பதுரை உள்ளிட்டோர் தற்போது டெல்லியில் இருப்பதாக கூறப்படுகிறது.அதேபோல், அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என தி.மு.க.
தரப்பில் நிபந்தனை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியின் எம்.பி.க்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனை தி.மு.க. உறுதிப்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்ட அறிக்கையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க. ஏற்கனவே எடுத்துள்ள நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நிகழ்வில் தி.மு.க. பங்கேற்காது என்றும் தெரிவித்துள்ளார்.இதேபோல், தே.மு.தி.க.வும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அக்கட்சியின் எம்.பி. சுதீஷ் கலந்துகொள்ள மாட்டார் என கூறப்பட்டுள்ளது.மேலும், தொகுதி மறுவரையறை தொடர்பான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யமும் பங்கேற்கவில்லை. அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.