‘மகுடம்’ படத்தில் முதல் முறையாக சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன் – நடிகை அஞ்சலி
நடிகர் விஷால் இயக்கி, நடிக்கும் ‘மகுடம்’ திரைப்படத்தில் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்காக தனது திரைப்பயணத்தில் முதல்முறையாக சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, அஞ்சலி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், விஷால் இப்படத்தில் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99-வது தயாரிப்பாக ‘மகுடம்’ உருவாகியுள்ளது. இதன் மூலம் இயக்குநராக புதிய பயணத்தை விஷால் தொடங்கியுள்ளார். படம் வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று வெளியான டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், சமூக வலைதளங்களிலும் கவனம் ஈர்த்து வருகிறது.இந்நிலையில், ‘மகுடம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட நடிகை அஞ்சலி, படத்தில் தனது கதாபாத்திரம் குறித்தும் அனுபவம் குறித்தும் பேசினார்.
அவர் கூறியதாவது:
“எனது நெருங்கிய நண்பரான விஷால் முதல் முறையாக இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ‘மகுடம்’ வெற்றிபெற வேண்டும் என அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி இன்று நம்முடன் இல்லை என்றாலும், இந்தப் படம் வெற்றியடைவதை பார்த்து அவர் நிச்சயம் மகிழ்ச்சியடைவார்.‘மகுடம்’ படத்தில் அன்னபூரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவற்றின் பட்டியலில் அன்னபூரணிக்கும் முக்கிய இடம் உண்டு. அந்த அளவுக்கு அழகான கதாபாத்திரமாக இது அமைந்துள்ளது.மேலும், தமிழ் சினிமாவில் எனது பயணத்தில் முதல்முறையாக இந்தப் படத்திற்காக சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன். படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘மகுடம்’ விஷாலுக்கு ஒரு வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார்.