பெண் குறித்து உதயநிதி பேசிய விதம் கண்டனத்துக்குரியது; அவையில் பங்கேற்க வாய்ப்பு வழங்க வேண்டும் - மு.வீரபாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூரில் நேற்று காவிரி நதி நீர் உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரத்தை முன்னிறுத்தி திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையில், பெண் குறித்து கண்ணியத்துக்கு புறம்பாக கருத்து தெரிவித்ததாகக் கூறி அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் போன்ற முக்கியமான பொறுப்பில் இருப்பவர் இத்தகைய கருத்துகளை வெளியிடுவது அந்தப் பதவிக்கு ஏற்றதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இன்று (04.08.2026) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், நாளை (05.08.2026) நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் 2026-27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது, எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் அவையில் பங்கேற்று தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அரசை வலியுறுத்தியுள்ளது.