புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா விமரிசையாக நடைபெற்றது
புட்டபர்த்தி:ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா இன்று (ஜூலை 29) பக்தி நிறைந்த சூழலில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.குரு பூர்ணிமாவை முன்னிட்டு இன்று காலை முதல் இரவு வரை பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றுள்ளனர்.விழாவையொட்டி பிரசாந்தி நிலையம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக குல்வந்த் அரங்கம் வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலத்தில் காட்சியளித்தது. காலை 8 மணிக்கு வேத பாராயணத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து காலை 8.20 மணிக்கு பிரசாந்தி பஜன் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியான **‘குரு வந்தனம்’** நடைபெற்றது.காலை 9 மணிக்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் டிரஸ்டி எஸ்.எஸ். நாகானந்த் உரையாற்றினார். அப்போது பகவானின் போதனைகள் மற்றும் பகவத் கீதை உள்ளிட்ட வேதங்களில் இடம்பெறும் கருத்துகளை மேற்கோள் காட்டி, சத்குருவின் மகத்துவத்தை விளக்கினார். இதனைத் தொடர்ந்து காலை 9.10 மணிக்கு ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா உரையாற்றினார்.
தனது உரையில் நிமிஷ் பாண்டியா, நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் **‘பிரேம பிரவாஹினி’** திட்டம் குறித்து பேசினார். மேலும் ஏகலைவன், நசிகேதன் மற்றும் அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மாவுடன் இருந்த குரு-சீடர் உறவுகளை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டு, நம்பிக்கை, முழுமையான சரணாகதி மற்றும் சந்தேகமற்ற கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.விழாவின் ஒரு பகுதியாக, கிராமப்புற மக்களுக்கு இலவசமாகவும் தரமானதாகவும் மருத்துவ சேவைகளை அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே வழங்கும் நோக்கில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஸ்ரீ சத்ய சாய் நடமாடும் மருத்துவமனை இன்று காலை தொடங்கி வைக்கப்பட்டது.இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் கே.
நரசிம்மன், மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்காத பகுதிகளில் வசிக்கும் மக்களையும் சென்றடையும் வகையில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளதாக விளக்கினார்.350-க்கும் அதிகமான தன்னார்வ மருத்துவர்களின் பங்களிப்புடன் இயங்கி வரும் இந்த நடமாடும் மருத்துவமனை, அவ்வப்போது மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், தினசரி கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் மற்றும் ஆன்மிக சேவையை ஒருங்கிணைத்து இந்தத் திட்டம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்த மருத்துவமனையில் உள்ள விரிவான பரிசோதனை வசதிகள் மூலம் கிராமங்களிலேயே நோயாளிகள் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். மேலும், மருத்துவமனையில் செயல்படும் மருந்தகத்தின் மூலம் உடனடியாக மருந்துகளும் வழங்கப்படுகின்றன.இதனைத் தொடர்ந்து தெய்வீக சொற்பொழிவு, பஜனை மற்றும் மங்கள ஆரத்தி நடைபெற்றது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவை தரிசனம் செய்து வருகின்றனர்.