பீகாரில் அதிர்ச்சி: பள்ளிக்குச் சென்ற 12-ம் வகுப்பு மாணவி துப்பாக்கியால் சுட்டுக்கொலை
பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டம் கைஜியா கிராமத்தைச் சேர்ந்த உமேஷின் 17 வயது மகள் சோனம் குமாரி, அருகிலுள்ள புசா நகரில் இயங்கும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் நடந்து சென்றுகொண்டிருந்த சோனம் குமாரியை, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு இளைஞர் திடீரென துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் சோனம் குமாரியை காதலிக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.