பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், மாநிலம் முழுவதும் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து வருகிறது. தொடக்கத்தில் பெரும்பாலான விவசாயிகள் இந்த கூட்டுறவு சங்கங்களுக்கே பாலை விற்பனை செய்து வந்தனர்.ஆனால், தொடர்ந்து அதிகரித்து வரும் செலவுகளுக்கு ஏற்ப ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தாததால், உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பால் வழங்குவதில் ஆர்வம் குறைந்து, தனியார் நிறுவனங்களை நாடும் நிலை ஏற்பட்டது. ஆவின் சராசரியாக ஒரு லிட்டர் பாலை ரூ.34-க்கு கொள்முதல் செய்யும் நிலையில், தனியார் நிறுவனங்கள் ரூ.50 வரை வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் தனியார் நிறுவனங்களுக்கு பால் விற்பனை செய்வதையே அதிகம் விரும்புகின்றனர்.பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் மற்றும் ஆவின் பிரதம சங்கங்களின் பணியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இந்த நிலையில், சட்டசபையில் 110-வது விதியின் கீழ் பேசிய முதல்-அமைச்சர் விஜய், தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.தமிழகத்தில் 8,800 பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 3 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினமும் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 31 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனம் மூலம் தினசரி நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது.தற்போது 4.3 சதவீத கொழுப்பு மற்றும் 8.2 சதவீத இதர சத்துகள் கொண்ட ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.35 கொள்முதல் விலையாகவும், மாநில ஊக்கத்தொகையாக ரூ.3-ம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, ஒரு லிட்டர் பாலுக்கான மொத்த கொள்முதல் விலை ரூ.38 ஆக உள்ளது. இந்த விலை 2022-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது.அதிகாலை முதலே மாடுகளை பராமரித்து பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் உழைப்பு, கால்நடை தீவனம் மற்றும் தொழிலாளர்களுக்கான கூலி உள்ளிட்ட அதிகரித்து வரும் செலவுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும், நிதி நெருக்கடி இருந்தபோதிலும் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் உழைப்பையும் கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை உயர்த்துவது அரசின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.அதன்படி, கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் ஒரு லிட்டர் பாலுக்கான கொள்முதல் விலையை ரூ.1 உயர்த்தவும், மாநில ஊக்கத்தொகையை ரூ.3-ல் இருந்து ரூ.5 ஆக அதிகரிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டர் பாலுக்கான மொத்த கொள்முதல் விலை ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்கிறது.இந்த விலை உயர்வின் மூலம் 3 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். இதற்காக அரசுக்கு மாதம் ரூ.30 கோடியும், ஆண்டுக்கு ரூ.360 கோடியும் கூடுதல் செலவு ஏற்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.