த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் ஏன் குரல் எழுப்புகிறார்கள் என்பது புரியவில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியபோது, முதல்-அமைச்சர் விஜய் 110-வது விதியின் கீழ் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், மருத்துவக் காப்பீட்டு தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்துவது, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பது உள்ளிட்ட அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.இதற்கிடையில், தங்களது கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.அதன்பின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சவுதி அரேபியாவில் ஈரான் தாக்குதலில் உயிரிழந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த தமிழக மீனவர் தொடர்பான விவகாரத்தை அவையில் பேச அனுமதி வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.உலகின் எந்த நாட்டில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து நாட்களுக்கு முன்பே தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் இதுவரை விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.அ.தி.மு.க.
அல்லது தி.மு.க. ஆட்சி நடைபெற்றிருந்தால் இந்த விவகாரம் உடனடியாக அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.தற்போதைய அரசிடம் உண்மையான தமிழ் உணர்வு இல்லை என்றும், தமிழர்களின் பாதுகாப்பில் அக்கறை காட்டப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.சவுதி அரேபியாவில் உயிரிழந்த சீர்காழி மீனவரின் உடலை ஒரு வாரம் கடந்தும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.தமிழர்களைப் பாதுகாப்போம் என்று கூறும் அரசு, இந்த விவகாரத்தில் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மீனவர் உயிரிழந்த நிலையில் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கைதட்டி சிரித்துக்கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எதற்காக குரல் எழுப்புகிறார்கள் என்பது தமக்குப் புரியவில்லை என்றும், தற்போது மாநிலத்தில் 'ரீல்ஸ் அரசாங்கம்' நடைபெற்று வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார். மீனவர் பிரச்சினையை விட முக்கியமான வேறு எந்த விவகாரம் இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.