பாகிஸ்தானுக்கு இந்திய ஏற்படுத்திய சேதம் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய்; அண்ணாமலை பேச்சு
கோவை: ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு இந்தியா ஏற்படுத்தியிருக்கக்கூடிய சேதத்தின் மதிப்பு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும், இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.14,500 கோடி என்றும் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கோவையில் நடைபெற்ற ஆப்ரேஷன் சிந்தூர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இந்த நூல் மாணவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று என்றார். ராணுவ வீரர்களின் கடின உழைப்பையும், அவர்களின் அர்ப்பணிப்பையும் புத்தகம் எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.ராணுவத்தினரின் பணியை நாம் பாராட்டுகிறோமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் தங்கள் கடமையை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதை இந்த நூல் உணர்த்தும் என்றும் அண்ணாமலை கூறினார். இளைஞர்கள் மத்தியில் இந்தப் புத்தகம் தாக்கத்தை ஏற்படுத்தி, இந்திய ராணுவத்தில் இணைந்து நாட்டுக்கு சேவை செய்யும் ஆர்வத்தை உருவாக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.ஆப்ரேஷன் சிந்தூருக்காக இந்தியா செலவிட்ட மொத்த தொகை 408 மில்லியன் டாலர், அதாவது ரூ.3,881.66 கோடி என ஓர் ஆய்வறிக்கை கூறுவதாக அண்ணாமலை தெரிவித்தார். இந்தியாவின் தற்போதைய பொருளாதார மதிப்பு 4.1 டிரில்லியன் டாலர் என்றும், இதன் அடிப்படையில் பாதுகாப்புத் துறை பட்ஜெட்டில் 0.47 சதவீதம் ஆப்ரேஷன் சிந்தூருக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.பொருளாதார ரீதியாக ஒரு நாடு வலுவாக வளர்ந்தால் மட்டுமே, பாதுகாப்புப் படையினருக்கு தேவையானவற்றை வழங்க முடியும் என்றும், தேவைக்கு அதிகமாகவும் வளங்களை ஒதுக்க முடியும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார். பொருளாதார வளர்ச்சி வலுவாக இருப்பதால், எவ்வளவு பெரிய போர் சூழல் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இந்தியாவின் பொருளாதார மதிப்பு 4.1 டிரில்லியன் டாலர் எனக் குறிப்பிட்ட அண்ணாமலை, பாகிஸ்தானின் பொருளாதார மதிப்பு 375 பில்லியன் டாலர் என தெரிவித்தார்.
பாகிஸ்தானின் மொத்த பொருளாதார மதிப்பு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்புக்கு இணையான அளவில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
25 பைசா நாணயத்துக்கும் ரூ.500 நோட்டுக்கும் இடையிலான வித்தியாசம்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருளாதார வித்தியாசத்தை விளக்குவதற்காக, 25 பைசா நாணயத்தையும் ரூ.500 நோட்டையும் ஒப்பிட்டு அண்ணாமலை பேசினார். பாகிஸ்தான் தற்போது தனித்துவமான நாடாக செயல்படவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.ஆப்ரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள் சீனாவிடம் இருந்தும், ட்ரோன்கள் துருக்கியில் இருந்தும் வாங்கப்பட்டவை என்று அவர் கூறினார். மேஜர் மதன் எழுதிய புத்தகத்தில், சீனா மற்றும் துருக்கி தயாரித்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் செயல்படுகிறதா என்பதைச் சோதிப்பதற்காக வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.புதிய தயாரிப்புகளை சோதனை செய்வதற்கான களமாகவே பாகிஸ்தான் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை 25 பைசா நாணயத்துக்கும் ரூ.500 நோட்டுக்கும் இடையிலான வித்தியாசத்துடன் அவர் ஒப்பிட்டார்.ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானுக்கு இந்தியா ஏற்படுத்தியிருக்கக்கூடிய சேதம் 1.5 பில்லியன் டாலர், அதாவது தற்போதைய மதிப்பில் ரூ.14,500 கோடி என அண்ணாமலை மீண்டும் குறிப்பிட்டார். இந்தச் சேதத்தில் பாகிஸ்தானின் உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளும், சேதமடைந்த தளவாடங்களுக்கு மாற்றாக புதிதாக வாங்கிய செலவுகளும் அடங்கியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.