பழைய குற்றாலம் தவிர பிற அருவிகளில் குளிக்க அனுமதி; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழைய குற்றால அருவியைத் தவிர, மற்ற அனைத்து முக்கிய அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து அருவிகளிலும் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழை குறைந்து, நீர்வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியதால் அந்தத் தடை பெரும்பாலான அருவிகளில் நீக்கப்பட்டுள்ளது.மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளநீர் குறைந்ததைத் தொடர்ந்து, அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புலி அருவி மற்றும் சிற்றருவியிலும் பாதுகாப்பான அளவில் தண்ணீர் விழுவதால், ஏராளமானோர் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.ஆனால், பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு இன்னும் முழுமையாக குறையாததால், அங்கு மட்டும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.மேலும், மலைப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டால், பாதுகாப்பு காரணங்களுக்காக கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்படலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.