பழனி ரூ.100 கோடி நில மோசடி - சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது
பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமானதாக கூறப்படும் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் தொடர்பான முறைகேடு பத்திரப்பதிவு வழக்கில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்கு 1.45 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலம் கடந்த மாதம் 6ஆம் தேதி தனிநபர்கள் பெயரில் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள அந்த நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகியோரின் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக கூறி, பழனி மலையடிவார போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.பின்னர், அந்த பத்திரப்பதிவை நீதிமன்றம் ரத்து செய்ததுடன், விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. நிலப் பதிவு தொடர்பாக முறைகேடு செய்ய மறுத்த பழனி சார்பதிவாளர்கள் விடுப்பில் சென்றதாகவும், அதன்பின் கொடைக்கானலில் பணியாற்றிய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பழனிக்கு வரவழைக்கப்பட்டு சர்ச்சைக்குரிய பதிவு நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து ஜஸ்டின் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். அவருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த மனு மீதான இறுதி உத்தரவை உயர்நீதிமன்றம் நேற்று வழங்கியது.தீர்ப்பில், பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள மடத்துக்குச் சொந்தமானதாக கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை திண்டுக்கல் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.மேலும், இந்த சொத்து தொடர்பான போலி ஆவணங்கள் தயாரிப்பதில் அன்வர்தீன் முக்கிய பங்கு வகித்ததாகவும், 1998ஆம் ஆண்டு முதலே அந்த நிலத்தை அபகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த வழக்கில் அன்வர்தீன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.நிலத்தை பதிவு செய்வதற்காக பழனி சார்பதிவாளர் பாலசுந்தருக்கு அன்வர்தீன் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு அவசரமாக விற்பனை செய்யப்பட்டிருப்பதும் ஆவணத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.மேலும், இந்த பதிவு நடவடிக்கையில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளதால் விரிவான விசாரணை அவசியம் என்றும், இந்நிலையில் முன்ஜாமீன் வழங்குவது விசாரணையை பாதிக்கும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.பழனி சார்பதிவாளர் பாலசுந்தர் பதிவு செய்த குறிப்புகளை புறக்கணித்து, கொடைக்கானலில் இருந்து பொறுப்பு சார்பதிவாளராக வந்த ஜஸ்டின் மணிகண்டன் நேரடியாக பதிவு நடவடிக்கையை நிறைவேற்றியிருப்பது, மற்ற குற்றச்சாட்டுக்குள்ளானவர்களுக்கு உதவும் வகையில் அவர் செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், அவரை காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என்றும் நீதிமன்றம் கூறியது.இதன் அடிப்படையில் ஜஸ்டின் மணிகண்டனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், அவருக்கு வழங்கப்பட்டிருந்த இடைக்கால முன்ஜாமீனும் ரத்து செய்யப்பட்டது.
முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று சிபிசிஐடி போலீசார் ஜஸ்டின் மணிகண்டனை கைது செய்தனர். இந்த நில மோசடி வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஜஸ்டின் மணிகண்டன் ஐந்தாவது கைது செய்யப்பட்டவராக உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.