பல்லடத்தில் வீடு புகுந்து தாய், மகள் வெட்டிக்கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீட்டுக்குள் புகுந்து காதலியும் அவரது தாயும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பல்லடம் அடுத்த பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசி. இவருக்கும் அக்ஷய் என்ற இளைஞருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியுள்ளது. இருவரும் தங்களது பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்த திருமண விவரம் பூவரசியின் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், அவரது தாய் தனலட்சுமி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பூவரசி, அக்ஷயுடன் செல்ல மறுத்ததுடன், அவருடனான காதலையும் முறித்துக் கொண்டார்.இதனால் ஆத்திரமடைந்த அக்ஷய், செவ்வாய்க்கிழமை பூவரசியின் வீட்டுக்குள் திடீரென நுழைந்தார்.
அங்கு பூவரசிக்கும் அக்ஷய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூவரசியையும் அவரது தாய் தனலட்சுமியையும் அக்ஷய் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற அக்ஷயை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.பட்டப்பகலில் நடைபெற்ற இந்த இரட்டைக் கொலை சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.