நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணையான பவானிசாகர், ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. 105 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.கடந்த சில மாதங்களாக நீலகிரி பகுதியில் போதிய மழை இல்லாததால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து 54 அடி அளவுக்கு குறைந்தது. வழக்கமாக ஆகஸ்டு 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும். ஆனால், தற்போது அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால், இந்த ஆண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் நிலவி வருகிறது.இந்த நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 3,405 கன அடி தண்ணீர் வந்த நிலையில், நேற்று அதே நேரத்தில் நீர்வரத்து 5,327 கன அடியாக அதிகரித்தது.கடந்த 1-ந் தேதி மதியம் 2 மணியளவில் 54.98 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று மதியம் 2 மணிக்கு 58.18 அடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் சுமார் 8 நாட்களில் அணையின் நீர்மட்டம் 3 அடிக்கும் மேல் அதிகரித்துள்ளது.தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், பவானிசாகர் அணையை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.