தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னையில் இன்று
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் சென்னை மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா நேற்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, இரவு 9 மணியளவில் சென்னை வந்தடைந்தார்.இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அதே ஓட்டலில் தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மற்றும் தென் மண்டல குழு கூட்டம் நடைபெற உள்ளது. தென் மண்டல குழுவின் தலைவராக அமித்ஷாவும், துணை தலைவராக முதல்-அமைச்சர் விஜய்யும் செயல்பட்டு வருகின்றனர்.இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம், தொழில் முதலீடுகள், நீர்வளப் பங்கீடு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தி பிரதமர் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள மண்டல குழு, மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்திலும் இந்த மாநாடு நடைபெறுகிறது.மாநாட்டில் தொகுதி மறுசீரமைப்பு, காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசிடம் தமிழக அரசு தரப்பில் பேசப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மாநாட்டில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக்ரமர்கா, கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரள முதல்-மந்திரி சதீசன், புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், அந்தமான்-நிக்கோபர் தீவுகளின் துணை நிலை கவர்னர், லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.