திமுகவின் ‘கட்டப்பா’ நான்தான் – நடிகர் சத்யராஜ் பேச்சு
சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும் கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தில் கணினி, தையல், அழகுக் கலை உள்ளிட்ட பயிற்சிகளை நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு, பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 250 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், திமுக தேர்தலை மட்டுமே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி அல்ல என்றும், சமூக சேவை மற்றும் மக்களின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட இயக்கம் என்றும் கூறினார். சமூகத்தில் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவது அந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கமாக இருந்து வருகிறது என்றும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்தப் பணியே தொடரும் என்றார்.மேலும், கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் உருவாகி வரும் பூங்காவை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக இருந்து திறந்து வைப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதன் கொள்கை வழிகாட்டிகளாக பெரியாரையும் அம்பேத்கரையும் மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.முன்னாள் முதல்வர் கருணாநிதி பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைத்தவர் என்றும், கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவெடுத்தது மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் எனவும் சத்யராஜ் குறிப்பிட்டார்.
தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் திட்டங்களின் பெயர்களை மாற்றலாம்; ஆனால் மக்களின் நலனுக்காக செயல்படும் திட்டங்களை மாற்றாமல் தொடர வேண்டும் என்றும்அவர்தெரிவித்தார்.தற்போதைய ஆட்சியாளர்கள் திமுக வகுத்த வளர்ச்சி பாதையைப் பின்பற்றுவது மாநிலத்திற்கு நல்லது என்றும், யார் அமைச்சர் என்பது மாறக்கூடும்; ஆனால் மா. சுப்பிரமணியன் எப்போதும் தன்னுடைய அன்புத் தம்பியும் சுகாதாரத்துறை அமைச்சரும்தான் என நகைச்சுவையுடன் கூறினார்.திமுக ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டின் நலனுக்காக தொடர்ந்து செயல்படும் இயக்கம் என்று கூறிய அவர், திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் தன்னுடைய ஆதரவு தொடரும் என்றார். ஆட்சியில் இருப்பதால் மட்டுமே ஆதரவு அளிப்பவர் அல்ல என்றும், “திமுகவின் கட்டப்பா நான்தான்” என்று சொல்லிக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாடு வளமாக இருப்பதால்தான் தங்களுக்கு சினிமா துறையில் வாய்ப்புகளும் வருமானமும் கிடைக்கிறது என்றும், தமிழகத்தின் நலனுக்காக திமுக எப்போதும் செயல்படும் இயக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், தாங்கள் வழங்கிய ஆட்டோவில் தற்போது வேறு கட்சியின் கொடி பறப்பதாக சிலர் கூறியதாகவும், அது எவ்வளவு நாள் தொடரும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் சத்யராஜ் கூறினார். அவசரமாக மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் வாக்களித்ததாகவும், “குழந்தைகள், நண்பா, நண்பீஸ்” போன்றவற்றின் மூலம் பெரியவர்கள் ஏமாற்றப்பட்டு வாக்குகள் பெறப்பட்டதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.