திண்டுக்கல்: கிராமத்துக்குள் புகுந்த காட்டெருமையால் பொதுமக்கள் அச்சம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் உள்ள மங்களம்கொம்பு, தாண்டிக்குடி, பெரும்பாறை, கானல்காடு, கே.சி.பட்டி, குப்பம்மாள்பட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் காட்டு யானைகள் மற்றும் காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.கடுமையான வெயில் நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களுக்குள் நுழையும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், பெரும்பாறை அருகேயுள்ள மஞ்சள்பரப்பு கிராமத்துக்குள் நேற்று ஒரு காட்டெருமை புகுந்து நீண்ட நேரம் சுற்றித்திரிந்தது.
சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை உரசிக்கொண்டு சென்ற அந்த விலங்கை பார்த்த பொதுமக்கள் பதற்றமடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்தனர்.இதற்கிடையில், ஆபத்தைப் பொருட்படுத்தாமல் சில இளைஞர்கள் காட்டெருமைக்கு அருகில் சென்று தங்களது செல்போனில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் கிராமப் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டெருமை, பின்னர் தானாகவே மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.