தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்: விவசாயிகளுக்கான பல புதிய திட்டங்கள் அறிவிப்பு – முக்கிய அம்சங்கள்
தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். 2026–27 நிதியாண்டுக்கான இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயம், தோட்டக்கலை, உயிர்ம வேளாண்மை, நீர் மேலாண்மை, இயந்திரமயமாக்கல், சேமிப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான புதிய திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டன.பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் சந்தித்து பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். அதேவேளை, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்தனர்.பட்ஜெட் உரையின்போது முதல்-அமைச்சரைப் பாராட்டி அமைச்சர் வினோத் சில பகுதிகளை வாசித்ததை எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. இதையடுத்து, வேளாண் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை மட்டும் வாசிக்குமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் வினோத், விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் கருத்துகளைப் பெற்று இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டதாக தெரிவித்தார். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் தொடர்வதோடு, புதிய முன்னோடி திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வேளாண்மை வளர்ச்சியே அனைத்து துறைகளின் முன்னேற்றத்திற்கும் அடித்தளம் என்ற நோக்கில் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
முக்கிய அறிவிப்புகள்
* நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நஞ்சில்லா வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.5 கோடி.
* கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களின் களப்பயிற்சிக்காக 6 புதிய பேருந்துகள் வாங்க ரூ.3 கோடி.
* தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் 'நம்மாழ்வார்' பெயரில் உயிர்ம வேளாண்மை பட்டயக் கல்லூரி அமைக்க ரூ.5 கோடி.
* கியூஆர் கோடுடன் விதைச் சான்றிதழ் வழங்கும் திட்டத்திற்கு ரூ.1 கோடி.
* உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.20 கோடி.
* திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம், கும்பகோணம் ஆகிய இடங்களில் புதிய வேளாண் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்களுக்கு ரூ.4.6 கோடி.
* இரண்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகளுக்கு ரூ.4.80 கோடி.
* கடலோர மாவட்டங்களில் நன்னீர் கிணறுகள் அமைத்து மிளகாய், கொத்தமல்லி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.49.4 லட்சம்.
* 500 விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறு அமைக்க 60 சதவீதம் வரை மானியத்துடன் ரூ.6 கோடி.
* இ-வாடகை 2.0 செயலி மூலம் இயந்திர வாடகை சேவையை வலுப்படுத்த 463 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கப்படும்.
* வேளாண் இயந்திர பராமரிப்பு மையங்கள் அமைக்க 50 சதவீத மானியத்துடன் ரூ.1.12 கோடி.
* 500 புதிய பண்ணைக் குட்டைகள் 100 சதவீத மானியத்தில் உருவாக்கவும், மேலும் 500 குட்டைகளை 75 சதவீத மானியத்தில் தூர்வாரவும் ரூ.8.5 கோடி.
* 1,720 ஏக்கரில் மருத்துவப் பயிர்கள் சாகுபடிக்கு ரூ.1.51 கோடி.
* புளுபெரி, அவகோடா, கிவி உள்ளிட்ட உயர்மதிப்பு பழ உற்பத்தியை அதிகரிக்க ரூ.1.87 கோடி.
* அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் 'வெற்றி விவசாயி விருது' வழங்கப்படும்.
முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரம். மொத்தம் 90 பரிசுகளுக்கு ரூ.67.50 லட்சம்.
* 57 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க ரூ.22 கோடி.
* துளித் துளி நீர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.785 கோடி.
* அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் மேம்பாட்டுக்கு ரூ.2.3 கோடி.
* வேளாண் காடுகள் திட்டத்திற்கு ரூ.17.70 கோடி.
* தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் அமைக்க ரூ.5.30 கோடி.
* பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்கு ரூ.27.21 கோடி.
* பனை பாதுகாப்பு இயக்கத்திற்கு ரூ.2 கோடி.
* மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் அஞ்சலை அம்மாள் பெயரில் விருதுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.2.50 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1.50 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம்.
* மாடித்தோட்டம், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நிழல்வலைக் குடில்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.10 கோடி.
* 'வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்' திட்டத்திற்கு ரூ.10 கோடி.
* 'தமிழ்நாடு தளிர்கீரைகள் திட்டம்' செயல்படுத்த ரூ.1.20 கோடி.
* சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருதுக்கு ரூ.11 லட்சம்.
* 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ரூ.7.1 கோடி.
* கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.9 கோடி.
* குறுதானிய இயக்கத்திற்கு ரூ.7.61 கோடி.
* விளைபொருட்களை மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க 43,500 தார்பாய்கள் வழங்க ரூ.10 கோடி.
* தொழில்நுட்பமும் பாரம்பரியமும் இணையும் வேளாண் கண்காட்சிக்கு ரூ.3 கோடி.
* காட்டுப்பன்றி சேதத் தடுப்பு திட்டத்திற்கு ரூ.7.35 கோடி.
* மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டிற்கு ரூ.36 கோடி.
* விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்கு ரூ.7,432 கோடி.
* உழவர் அடையாள அட்டை பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் மண்வள அட்டைகள் வழங்கப்படும்.
* உயிர்ம உர பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான 'உழவர்' செயலி அறிமுகப்படுத்த ரூ.2 கோடி.
* நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானிய திட்டத்திற்கு ரூ.34.72 கோடி.
* 'தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம்' செயல்படுத்த ரூ.122.51 கோடி.
இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாய உற்பத்தி அதிகரிப்பு, உயிர்ம வேளாண்மை ஊக்குவிப்பு, நீர் வள மேலாண்மை, இயந்திரமயமாக்கல், சேமிப்பு வசதிகள், தோட்டக்கலை மற்றும் விவசாயிகளுக்கான ஊக்கத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் முன்கூட்டியே நிலவியிருந்தது.