தலைமைச்செயலகம் முன்பு போராட்டம்: 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது
பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, சென்னை தலைமைச்செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 45 விவசாயிகள் இன்று காலை தலைமைச்செயலகம் முன்பு கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின் போது, அரசு உடனடியாக பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.சட்டப்பேரவைக்குள் விவசாயிகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், பேரவைக்கு வெளியே நடைபெற்ற இந்தப் போராட்டம் காரணமாக தலைமைச்செயலகம் சுற்றுவட்டாரத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.இதையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைமைச்செயலக வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டன.