'தர்மன்' படத்தை சுந்தர்.சி ஏன் இயக்கவில்லை? - விளக்கம் அளித்த குஷ்பூ
ரஜினிகாந்த் நடித்து வரும் அவரது 173-வது திரைப்படமான 'தர்மன்' குறித்து, இயக்குநர் சுந்தர்.சி விலகிய விவகாரம் தொடர்பாக நடிகை குஷ்பூ சமீபத்திய நேர்காணலில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.தற்காலிகமாக 'தலைவர் 173' என்ற பெயரில் அறிமுகமான இந்தப் படத்தை, 'ஓ மை கடவுளே','டிராகன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த ஆக்சன் திரைப்படத்தில், ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்தப் படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவார் என்ற தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் சில காரணங்களால் அவர் அந்தத் திட்டத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது.
அதன் பிறகே இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றார்.இந்த விவகாரம் குறித்து பேசிய குஷ்பூ, "சில காரணங்களால் சுந்தர்.சி 'தலைவர் 173' படத்திலிருந்து விலகினார். அதற்கு மேல் இதுகுறித்து நான் எதையும் கூற விரும்பவில்லை," என்று தெரிவித்தார்.தொடர்ந்து அவர், "ஒரு இயக்குநர் எந்தப் படத்தை இயக்க வேண்டும், எந்தப் படத்தை இயக்க வேண்டாம் என்பதை தீர்மானிக்கும் முழு உரிமையும் அவருக்கே உள்ளது. சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கமாட்டார் என்ற தகவலை கமல்ஹாசனுக்கு தொலைபேசி மூலம் நான்தான் தெரிவித்தேன்," என்றும் கூறினார்.குஷ்பூவின் இந்த விளக்கம் தற்போது திரையுலகில் பரவலான பேசுபொருளாக மாறியுள்ளது.