தி.மு.க.வுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை - துரைமுருகன் காட்டம்
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் ஒற்றுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய சூழலில், தமிழக வெற்றி கழக (த.வெ.க.) அரசு கவனத்தைத் திசைதிருப்பும் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் நலனும், மாநிலத்துக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் பாதிக்கப்படாத வகையில் நியாயமான தொகுதி மறுசீரமைப்பு (Fair Delimitation) மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தி.மு.க.வின் நிலையான கொள்கை என தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிலேயே தி.மு.க. தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும், அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடரின் அலுவல் பட்டியலில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், அந்த விவகாரத்தில் தி.மு.க. என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்க எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.முறையற்ற தொகுதி மறுசீரமைப்பு இந்திய அளவில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை முதன்முதலில் எடுத்துரைத்து, அதற்கு எதிராக வலுவான கருத்தை உருவாக்கியதோடு, பல்வேறு மாநிலங்களின் ஒருமித்த குரலையும் ஒன்றிணைத்தது தி.மு.க. மற்றும் அதன் தலைவர் மு.க. ஸ்டாலின்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.இதற்காக சென்னையில் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தை நடத்தி, பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களை ஒரே அணியில் இணைத்து, இந்த விவகாரத்தை தேசிய அளவில் விவாதிக்கச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்ற காலத்திலேயே, தேர்தலைவிட தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாப்பதே முக்கியம் என்ற நிலைப்பாட்டை மு.க.
ஸ்டாலின் எடுத்ததாகவும், வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏற்றவும், மசோதா நகலை எரித்து எதிர்ப்புத் தெரிவிக்கவும் அவர் அழைப்பு விடுத்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 8-ஆம் தேதி அரசு அழைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிக்கத் தயக்கம் இல்லை என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை அமைக்கும் முயற்சி குறித்து விவாதிக்கவும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.புதிய கூட்டணிக் கட்சியான காங்கிரசின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக மேகதாது விவகாரத்தில் அமைதியாக இருந்து, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மட்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது ஏற்க முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படக் கூடாது என்றும், அத்தகைய சூழல் ஏற்பட்டால் அதைத் தடுக்க மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. முன்னணியில் இருக்கும் என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.தற்போதைய சூழலில் காவிரி உரிமையைப் பாதுகாப்பதும், மேகதாது அணைத் திட்டத்தைத் தடுக்கவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், தமிழ்நாட்டின் ஒருமித்த உணர்வை வெளிப்படுத்த வேண்டிய இந்த நேரத்தில் த.வெ.க. அரசு கவனத்தைத் திசைதிருப்பும் அரசியலைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.