தென்னை சாகுபடிக்கு ரூ.16 கோடி சிறப்புத் திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் 2026–27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அப்போது, தென்னை சாகுபடியை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் மாநில நிதியில் ரூ.16 கோடி மதிப்பில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்தார்.தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் எக்டரில் தென்னை சாகுபடி நடைபெற்று ஆண்டுதோறும் சுமார் 670 கோடி தேங்காய்கள் உற்பத்தியாகின்றன. தற்போது தென்னை சாகுபடி மற்றும் சந்தைப்படுத்தலில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு, பூச்சி மற்றும் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்துதல், மகசூலை அதிகரித்தல், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.திட்டத்தின் ஒரு பகுதியாக, தென்னை மரங்களின் வளர்ச்சியையும் மகசூலையும் மேம்படுத்தும் நோக்கில், 2026–27ஆம் ஆண்டில் 86 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள தென்னை மரங்களுக்கு "தென்னை டானிக்" வழங்க ரூ.6.20 கோடி மாநில நிதி ஒதுக்கப்படும்.வேர்வாடல் நோய் மற்றும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ உள்ளிட்ட தாக்குதல்களால் ஏற்படும் மகசூல் இழப்பைக் குறைக்கும் வகையில், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளுடன் உயிரியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக 1,350 ஏக்கர் பரப்பளவில் 'அபெர்டோகிரைசா' இரைவிழுங்கிப் பூச்சி மற்றும் 'கோகோகான்' நுண்ணுயிர் கலவை ஆகியவை 75 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கைக்காக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த தேவையான உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய ரூ.3 கோடி செலவில் ஐந்து புதிய உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆழியார் நகர் மற்றும் கண்ணம்பாளையம், தேனி மாவட்டம் வைகை அணை, விருதுநகர் மாவட்டம் தேவதானம் ஆகிய இடங்களில் கிரைசோபெர்லா உற்பத்தி மையங்களும், கன்னியாகுமரி மாவட்டம் புத்தளத்தில் ஐசாரியா ஃபுமோசோரோசியா உற்பத்தி மையமும் தொடங்கப்படும்.தரமான தென்னங்கன்றுகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கரூர் மாவட்டம் முதலைப்பட்டி அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 15 ஏக்கர் பரப்பளவில் ரூ.48 லட்சம் மதிப்பில் புதிய தென்னை நாற்றுப்பண்ணை அமைக்கப்படும்.தென்னை விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கவும், தென்னை மற்றும் அதனை சார்ந்த பொருட்களுக்கு மதிப்புக்கூட்டல் மூலம் சிறந்த சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும், "தமிழ்நாடு தென்னைப் பதப்படுத்தும் கழகம்" புதிதாக தொடங்கப்படும். இதற்காக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் ரூ.22.30 கோடி மாநில நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நடப்பாண்டில் ரூ.5.30 கோடி செலவிடப்படும்.இந்தக் கழகத்தின் மூலம் அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகள், பதப்படுத்துதல், தரச் சான்றிதழ், சிப்பம் கட்டுதல், ஏற்றுமதி தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும், தென்னை வளர்ச்சி வாரியம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து இந்தக் கழகம் செயல்படும்.மேலும், கொப்பரை விலை சரிவைத் தடுக்கும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரை கொள்முதல் செய்யும் "விலை ஆதரவுத் திட்டம்" உரிய நேரத்தில் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் வினோத் தெரிவித்தார்.