டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் போலீசில் புகார் அளிக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம்
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக பணம் வசூலிக்கப்பட்டால், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சென்னை பெரம்பூர், கொளத்தூர், மாதவரம் உள்ளிட்ட 30 இடங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி, அதில் தொடர்புடைய ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தேவராஜன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.மேலும், 2022 முதல் 2026 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் தொகையை சம்பந்தப்பட்ட ஊழியர்களிடமிருந்து மீட்டு அரசுக் கருவூலத்தில் செலுத்தவும், அவர்களுக்கு எதிராக பணி நீக்க நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.இந்த வழக்கை முன்பு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது புத்தகங்களை கட்டாயமாக பராமரிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என்ற சுற்றறிக்கை அனைத்து கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதிகளவில் வாடிக்கையாளர்கள் வருவதால் ரசீது வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு, நேற்று கூட மதுபானம் வாங்கியபோது ரசீது வழங்கப்படவில்லை என்றும், கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி, ஒரு சாதாரண பொருளை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கினாலும் ரசீது வழங்கப்படும் நிலையில், மாநில அரசுக்கு முக்கிய வருவாய் ஈட்டும் டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், வாடிக்கையாளர் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தேவையானால் காவலர்களை பணியில் அமர்த்தலாம் என்றும் குறிப்பிட்டார்.அதன்பின், டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை மீறி கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டால், நுகர்வோர் நேரடியாக காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது. அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை மீறி செயல்படும் சம்பவங்கள் குறித்து உரிய போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதி, மனுதாரர் அளித்துள்ள புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.