சென்னையில் இன்று ‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் மாநாடு; முதலமைச்சர் விஜய் பங்கேற்பு
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவித்து, புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் மாநாடு இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொள்கிறார்.17-வது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்தது. அதன் பின்னர், கடந்த மே 10-ஆம் தேதி மாநிலத்தின் 12-வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார்ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நிர்வாக மாற்றங்களை மேற்கொண்டு வரும் அரசு, தொழில் துறையில் முதலீடுகளை அதிகரிப்பதற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த நிலையில், ஆட்சியின் 96-வது நாளில் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த மாநாட்டுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமை வகிக்கிறார்.இந்த நிகழ்வில் 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் மூலம் ரூ.67,452 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,06,998 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களையும் சேர்த்து கணக்கிடும்போது, த.வெ.க. அரசு பதவியேற்ற முதல் 100 நாட்களுக்குள் மொத்தம் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.இந்த ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1,02,514 கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.