சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: ஒரே வாரத்தில் 308 புகார்களுக்கு நடவடிக்கை – டி.ஜி.பி அலுவலகம் தகவல்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கடந்த ஒரு வாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து டி.ஜி.பி அலுவலகம் விரிவான தகவலை வெளியிட்டுள்ளது.அதன்படி, மாநிலம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கள நடவடிக்கைகள், சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.கடந்த ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 6 வரை நடைபெற்ற நடவடிக்கைகளில், மாவட்ட களப்பிரிவுகள் மொத்தம் 308 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டன. அவற்றில் 16 வழக்குகள் பதிவு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், காணாமல் போன 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இதே காலகட்டத்தில், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் 3,402 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநிலம் முழுவதும் குற்றச்செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக அடையாளம் காணப்பட்ட 11,560 இடங்களில் கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.மேலும், அறிவுசார் குறைபாடு கொண்ட 6 பேர் மீட்கப்பட்டு மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
2 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டதுடன், பள்ளிப் படிப்பை இடைநிறுத்தியிருந்த 62 குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர்.சென்னை, தாம்பரம், தர்மபுரி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி மற்றும் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் பதிவான வழக்குகளில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை விரைந்து செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்குகளில் போக்சோ சட்டம், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டன. சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டதாகவும் டி.ஜி.பி அலுவலகம் தெரிவித்துள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், தமிழகத்தை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மேலும் பாதுகாப்பான மாநிலமாக மாற்றுவதில் இப்பிரிவு முக்கிய பங்காற்றி வருவதாகவும் டி.ஜி.பி அலுவலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.