சரிவில் இருந்து மீளுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்? இன்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை
டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. நத்தம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.நான்கு முறை டி.என்.பி.எல். சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், இந்த சீசனில் இதுவரை விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. முதல் போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அந்த அணி, அடுத்த ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள சேப்பாக் அணிக்கு பிளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்க இனி வரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, முந்தைய ஆட்டங்களில் செய்த தவறுகளை சரிசெய்து வெற்றிப் பாதைக்கு திரும்பும் நோக்கத்துடன் அந்த அணி களமிறங்கும். பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சேப்பாக் உள்ளது.முன்னாள் சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் இரண்டு ஆட்டங்களில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. தொடக்க ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய திண்டுக்கல் அணி, அடுத்த போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.வெற்றிக் கணக்கை தொடங்க சேப்பாக் அணி தீவிரம் காட்டும் நிலையில், திண்டுக்கல் அணி தனது இரண்டாவது வெற்றியை பெறும் முனைப்பில் களம் காண்கிறது. இதனால் இரு அணிகளும் மோதும் இந்தப் போட்டியில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இதுவரை 14 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
இதில் சேப்பாக் அணி 9 போட்டிகளிலும், திண்டுக்கல் அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
திருப்பூர் - நெல்லை மோதல்
இதே நத்தம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்சை எதிர்கொள்கிறது.
திருப்பூர் தமிழன்ஸ் தனது முதல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனால், அடுத்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியது.மறுபுறம், நெல்லை ராயல் கிங்ஸ் அணி தொடக்க இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நல்ல நிலையில் உள்ளது. இந்த வெற்றிப் பயணத்தை தொடர்வதுடன், தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்து ஹாட்ரிக் சாதனை படைக்கவும் நெல்லை அணி முனைப்புடன் களம் காணும்.அதேவேளையில், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் தனது வெற்றி உத்வேகத்தை தொடரும் நோக்கில் முழு பலத்தையும் வெளிப்படுத்தும். இதனால் இரு அணிகளுக்கு இடையேயான இந்த ஆட்டமும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் திருப்பூர் அணி 6 வெற்றிகளையும், நெல்லை அணி 3 வெற்றிகளையும் பெற்றுள்ளன.