சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும், தென் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளின் மேல் 5.8 முதல் 7.6 கிலோமீட்டர் உயரம் வரை மற்றொரு வளிமண்டல சுழற்சியும் காணப்படுகிறது. வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நிலவுகிறது.ஆகஸ்ட் 5 (இன்று): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, கரூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதேபோன்ற வானிலை நிலவும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.ஆகஸ்ட் 6 மற்றும் 7: நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.அதே நாட்களில், பிற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, கரூர் மற்றும் மதுரை மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 5 முதல் 9 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இல்லை. இந்தக் காலகட்டத்தில் வெப்பநிலை இயல்பான அளவிலேயே நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று நகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது; அதிகபட்சமாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 25 முதல் 26 டிகிரி செல்சியஸும் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.