கரூர்: வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில், வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.1,000 லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அரவக்குறிச்சி அருகேயுள்ள வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 36 வயதான அன்புராஜ், ராஜபுரம் கிராமத்தின் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வருகிறார். ராஜபுரம் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த விபிலன் (28), வாரிசு சான்றிதழ் பெற அவரை அணுகியபோது, சான்றிதழை வழங்க ரூ.1,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.லஞ்சம் வழங்க விருப்பமில்லாத விபிலன், இதுகுறித்து கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில், டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் ரசாயனம் பூசப்பட்ட ரூபாய் நோட்டுகளுடன் பொறி வைத்து சோதனை நடத்தினர். அப்போது, லஞ்சத் தொகையை பெற்றதாக கூறப்படும் அன்புராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.