ஈரோடு: பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு – உறவினர்கள் போராட்டம்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குப்பிச்சிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த யோகேஷ் (11) என்ற சிறுவன் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், இன்று மதிய உணவு இடைவேளையின்போது யோகேஷ் பள்ளி வளாகத்தில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, வளாகத்தில் அறுந்து கிடந்த மின்சார வயரை அவர் எதிர்பாராதவிதமாக மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட மாணவன் பலத்த காயமடைந்தார்.இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக மாணவனை மீட்டு அருகிலிருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி யோகேஷ் உயிரிழந்தார்.மாணவனின் உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.