இன்று ஆடிப்பெருக்கு விழா: காவிரியில் புனித நீராட பக்தர்களுக்காக ஷவர் வசதி
ஆடிப்பெருக்கு திருவிழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி, காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாத சூழ்நிலையில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் மாநகராட்சி சார்பில் ஷவர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர்களின் முக்கியமான பாரம்பரிய விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆடிப்பெருக்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ஆம் நாளில் காவிரி கரையோர பகுதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் இந்த விழா மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெறுவது வழக்கம்.கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் போதிய நீர்வரத்து இருந்ததால், அம்மா மண்டபத்தின் 12 படிக்கட்டுகளையும் தொட்டு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்.ஆனால் இந்த ஆண்டு பருவமழை குறைவாகப் பெய்ததாலும், கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் திறக்கப்படாததாலும் ஆறு வறண்ட நிலையில் உள்ளது. நீர்மட்டம் மிகவும் குறைந்திருப்பதால், மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்கான நீரும் திறக்கப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆடிப்பெருக்கு விழாவும் கடந்த ஆண்டுகளைப் போலக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஆடிப்பெருக்கு நாளில் சுமங்கலி பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்க காவிரி தாயை வழிபட்டு சிறப்பு பூஜைகள் செய்வதும், புதுமணத் தம்பதிகள் திருமண மாலைகளை காவிரியில் சமர்ப்பித்து புனித நீராடுவதும் நீண்டகால பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு ஆற்றில் தண்ணீர் இல்லாததால் அந்த வழிபாட்டு முறைகளிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.தற்போது காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் சிறிதளவு மட்டுமே தண்ணீர் தேங்கி காணப்படுவதுடன், அந்த நீர் துர்நாற்றம் வீசும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதில் பக்தர்கள் நீராட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மா மண்டபம் படித்துறையில் குடிநீர் குழாய்கள் மூலம் ஷவர் அமைத்து பக்தர்கள் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் வசதிக்காக சவுக்கு கட்டைகளால் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.விழாவின்போது அதிகளவில் மக்கள் திரள்வார்கள் என்பதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், காவிரி ஆற்றுக்குள் தற்காலிக கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது.திருவையாறு காவிரி புஷ்யமண்டப படித்துறையிலும் பக்தர்கள் புனித நீராடும் வகையில் பம்பு செட் மூலம் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரியும் அதன் கிளை ஆறுகளும் நீரின்றி காணப்படுவதால், கரையோர கிராமங்களில் இந்த ஆண்டைய ஆடிப்பெருக்கு விழா வழக்கமான உற்சாகத்தை இழந்துள்ளது. இதனால், ஆறுகளில் நீர் இல்லாத சூழலில் குழாய்நீரைப் பயன்படுத்தி பூக்கள், பழங்கள் வைத்து வழிபாடு செய்ய மக்கள் திட்டமிட்டுள்ளனர்.ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை பகுதியில் ஆற்றில் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் ஓடுவதால், ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் நீராடுவதை கருத்தில் கொண்டு படித்துறைகளில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆற்றில் இறங்கி குளிக்க முடியாதவர்களுக்காக அங்குள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி குளிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு நடவடிக்கையாக பவானி தீயணைப்பு நிலையத்தின் நீச்சல் வீரர்கள் ஆற்றங்கரையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், பவானி அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்களுடன் நடமாடும் முதலுதவி சிகிச்சை மையமும், ஆம்புலன்ஸும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.முன்னதாக 2019-ஆம் ஆண்டிலும் காவிரி ஆற்றில் போதிய நீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விழாவின்போது பக்தர்களுக்காக ஷவர் வசதி செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு 2020 முதல் 2025 வரை காவிரியில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் விழா சிறப்பாக நடைபெற்றது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நீரின்றி ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.