ஆடி அமாவாசை திருவிழா: சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெறுகிறது.இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தர உள்ளனர். மேலும், கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.சொரிமுத்து அய்யனார் கோவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வனப்பகுதியை பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.குடில்களில் தங்கும் பக்தர்கள் தேவையான பொருட்களை கொண்டு செல்வதற்காக நேற்று ஒரு நாள் மட்டும் தனியார் வாகனங்களில் கோவில் பகுதிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் தங்களது உடைமைகள் மற்றும் தேவையான பொருட்களுடன் கோவிலை நோக்கி சென்றனர்.இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை அகஸ்தியர்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள் மூலமாக மட்டுமே பக்தர்கள் கோவில் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் நெல்லை மண்டல நிர்வாக இயக்குனர் செல்வம் உத்தரவின் பேரில் இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.பக்தர்களின் பயண வசதிக்காக நெல்லை, ஆலங்குளம், சுரண்டை, அம்பை, தென்காசி மற்றும் அகஸ்தியர்பட்டி ஆகிய இடங்களில் இருந்து மொத்தம் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகள், போதைப்பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பொருட்களையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.இதனைத் தொடர்ந்து பாபநாசம் வனச்சோதனை சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலுக்கு செல்லும் அரசு பஸ்களை நிறுத்தி, அதில் பயணிக்கும் பக்தர்களின் உடைமைகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பொருட்களை சோதனை செய்த பின்னரே வனப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், வனத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.