விவசாயியை காப்பாற்றி உயிரிழந்த வாலிபர்: உடலை குளிர்சாதன பெட்டி இன்றி அனுப்பிய தாசில்தார் சஸ்பெண்ட்
வெள்ளத்தில் சிக்கிய விவசாயியின் உயிரைக் காப்பாற்றியபோது உயிரிழந்த வாலிபரின் உடலை, குளிர்சாதனப் பெட்டி வசதியின்றி சொந்த ஊருக்கு அனுப்பிய விவகாரத்தில் தாசில்தார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நீச்சல் பயிற்சியாளர் ராஜேஷ். இவர் சமீபத்தில் கண்ணூர் மாவட்டம் செருப்புழா பகுதியில், மீன்துள்ளி அருகே வெள்ளம் சூழ்ந்த வயலில் சிக்கித் தவித்த பென்னி (61) என்ற விவசாயியை மீட்க முயன்றார். அப்போது தனது லைப் ஜாக்கெட்டை கழற்றி பென்னிக்கு வழங்கி அவரது உயிரைக் காப்பாற்றினார்.ஆனால், அதன்பின்னர் ராஜேஷ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஆபத்தான சூழ்நிலையிலும் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் விவசாயியை மீட்ட அவரது துணிச்சலை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டினர்.ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ராஜேஷின் உடல் நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது.
பின்னர் அவரது உடல் பரியாரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பரிசோதனைகள் முடிந்ததும் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இதையடுத்து ராஜேஷின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் குளிர்சாதனப் பெட்டி வசதியின்றி இறுதி அஞ்சலிக்காக அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து கேரள வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி.அனில்குமார் விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பையன்னூர் தாசில்தார் கே.பி.போலை பணியிடைநீக்கம் செய்து அமைச்சர் உத்தரவிட்டார்.