80-வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி
இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற தேசிய விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கான சுதந்திர தின உரையை நிகழ்த்தினார்.சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், முப்படைகள் மற்றும் டெல்லி காவல்துறை வீரர்கள் வழங்கிய அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர், நாட்டின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களை தனது உரையில் எடுத்துரைத்தார்.சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், செங்கோட்டையைச் சுற்றியுள்ள முக்கியச் சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.மேலும், சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், நாட்டின் விடுதலைக்காக போராடி தியாகம் செய்த எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார். அவர்கள் கனவு கண்ட வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.140 கோடி இந்தியர்களின் பங்களிப்பால் பல்வேறு துறைகளில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த வளர்ச்சிப் பயணம் எதிர்காலத்தில் மேலும் வேகமடைந்து தொடர வேண்டும் என்றும் தனது உரையில் தெரிவித்தார்.