சுதந்திர தினத்தை முன்னிட்டு வங்கக் கடலில் தேசிய கொடியுடன் காரைக்கால் போலீசாரின் படகு பேரணி
இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசு அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், புராதன கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.இதன் ஒரு பகுதியாக, காரைக்கால் போலீசார் வங்கக்கடலில் தேசிய கொடிகளுடன் பிரம்மாண்ட படகு பேரணியை நடத்தினர். கடலோர காவல் படை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியில், 50-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளில் 200-க்கும் அதிகமான போலீசார் தேசிய கொடிகளை ஏந்தியபடி பங்கேற்றனர்.அரசலாறு முகத்துவாரத்தில் இருந்து தொடங்கிய பேரணி, கடலில் சுமார் 20 கடல் மைல் தொலைவு வரை நடைபெற்றது.
மாநில டி.ஐ.ஜி. சத்யா சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.கடலில் கம்பீரமாக அணிவகுத்துச் சென்ற போலீசாரை பார்த்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர். கடற்கரையில் தேசிய கொடிகளை அசைத்து, படகு பேரணியில் பங்கேற்ற போலீசாருக்கு அவர்கள் வரவேற்பு அளித்தனர்.