லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை சென்னை திரும்புகிறார் முதல்-அமைச்சர் விஜய்
தமிழகத்தின் பொருளாதாரத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்-அமைச்சர் விஜய் இங்கிலாந்து சென்றுள்ளார். லண்டனில் நடைபெற்ற முதலீட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி, மேம்பாட்டு வசதிகளை அமைப்பது தொடர்பாக தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்துக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இடையே கடந்த 14-ம் தேதி ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 45-க்கும் அதிகமான நாடுகளில் செயல்பட்டு வரும் ‘சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட்’ நிறுவனம், தனது பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய கூட்டுநிறுவனங்களுடன் இணைந்து தமிழகத்தில் ரூ.11,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடு சர்வதேச வாகன உற்பத்தித் துறையில் தமிழகத்தின் பங்களிப்பை மேலும் விரிவுபடுத்தும் என கூறப்படுகிறது. மேலும், ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனம், இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையை அமைக்க தமிழகத்தை தேர்வு செய்துள்ளது. இதற்காக ரூ.3,000 கோடி முதலீடு செய்வதற்கான விருப்பக் கடிதம் முதல்-அமைச்சர் விஜய்யிடம் வழங்கப்பட்டது. இதனிடையே, ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் சென்னையில் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை மவுண்ட் - பூந்தமல்லி சாலை பகுதியில் சுமார் ரூ.1,000 கோடி முதலீட்டில் இந்த மையம் அமைக்கப்பட உள்ளது. இதன் வாயிலாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குழுமம், எம்பெடட் சிஸ்டம்ஸ் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் துறைகளில் 600 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், சென்னை மற்றும் திருச்சியில் செயல்பட்டு வரும் தனது திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.