நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி (Auqib Nabi) இடம் பெற்றுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது காயமடைந்தார். இதன் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். காயத்தில் இருந்து முழுமையாக குணமடைவதுடன், அடுத்ததாக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு தயாராகவும் அவருக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.
Advertisement
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஆகிப் நபி, ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக முதல் மூன்று போட்டிகளுக்கான அணியிலும் ஆகிப் நபி சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளுக்குமான இந்திய அணியில் ஆகிப் நபி இடம்பிடித்துள்ளார்.