ரூ.68,483 கோடி சுங்கக் கட்டணம் வசூல்: அதிக வருவாய் ஈட்டிய மாநிலம் எது?
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வருவாய், சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவிக்கிறது.
சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் வகையைப் பொறுத்து கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. கார்கள், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்தனி கட்டண விகிதங்கள் அமலில் உள்ளன. மேலும், பாஸ்டேக் (FASTag) முறை அறிமுகமானதன் மூலம், வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் சுங்கக் கட்டணத்தை விரைவாக செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடிகள் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது.
இதுதொடர்பான 2025–26 நிதியாண்டுக்கான விவரங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அதன்படி, 2025–26 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் ரூ.68 ஆயிரத்து 483 கோடி சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியான கணக்கில், உத்தரப் பிரதேசம் ரூ.8 ஆயிரத்து 862 கோடியே 12 லட்சம் வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் அதே காலகட்டத்தில் ரூ.4 ஆயிரத்து 708 கோடியே 19 லட்சம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.