மோடி அரசு மாணவர்களை தேசத்தின் எதிரிகள் போல நடத்துகிறது - சோனியா காந்தி குற்றச்சாட்டு
'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கும், 'நீட்' தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் தற்கொலை சம்பவங்களுக்கும் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணி நடத்தினர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இதில் பங்கேற்றனர். பேரணியை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் கூட்டம் அதிகரித்ததால் போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளையும் பயன்படுத்தினர். இதற்கு பதிலாக சிலர் போலீசார் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது.போலீசாரின் தடியடியில் பல இளைஞர்கள் காயமடைந்து, நாடாளுமன்றம் அருகிலுள்ள ஆர்.எம்.எஸ். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த நடவடிக்கை நாடு முழுவதும் அரசியல் விவாதத்தை கிளப்பியதுடன், பல்வேறு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.இந்த சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரையில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.அதில், தற்போதைய கல்விச் சூழலில் நிலவும் நம்பிக்கையின்மையும், மத்திய அரசின் ஆணவமான மற்றும் பொறுப்பற்ற அணுகுமுறையும் மாணவர் போராட்டங்களுக்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவின் கல்வி அமைப்பு பாதிக்கப்பட்டு வருவதாகவும், அரசின் செயல்பாடுகளை மாணவர்களே வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது தார்மீக, அரசியல் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த கடமை என்றும், அவர்கள் கல்வி சீர்திருத்தங்களையும் பொறுப்புக்கூறலையும் மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் என்றும் சோனியா காந்தி கூறியுள்ளார். ஆனால் அதற்கு பதிலாக அரசு அடக்குமுறையை கையாள்ந்து, மாணவர்களை எதிர்கால தலைமுறையாக அல்லாமல், தேசத்தின் எதிரிகளாக நடத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.2020-ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு எதிர்ப்பு போராட்டங்களின்போது பல்கலைக்கழக வளாகங்களில் நடந்த போலீஸ் நடவடிக்கைகளையும், பெண் மல்யுத்த வீராங்கனைகள் எதிர்கொண்ட சம்பவங்களையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும், அவற்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஒப்புதல் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார்.