இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தின் மவுண்ட் மாங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, வில் யங்கின் அதிரடி சதத்தின் துணையுடன் 333 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான வில் யங், டிம் சீஃபெர்ட் ஆகியோர் இந்திய பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில், 58 ரன்கள் எடுத்திருந்த டிம் சீஃபெர்ட் குர்னூர் பிரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் தனது இன்னிங்ஸில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசினார். தொடர்ந்து களமிறங்கிய நிக் கெல்லி 4 ரன்களிலும், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் 8 ரன்களிலும் வெளியேறினர். மறுபுறம் விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடிய வில் யங், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஃபின் ஆலனும் அதிரடியில் இறங்கினார். 30 பந்துகளை எதிர்கொண்ட அவர் 41 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் ஆலன் அடித்த பந்தை ரோஹித் சர்மா சிறப்பாக கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் யங் சதம் அடித்து நியூசிலாந்து அணியின் ரன் குவிப்புக்கு முக்கிய பங்காற்றினார்.
Advertisement
இதையடுத்து 334 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி தனது துல்லியமான பந்துவீச்சால் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பினார். தொடக்க வீரராக வந்த ரோஹித் சர்மா, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணியின் ரன் கணக்கு தொடங்குவதற்கு முன்பே முதல் விக்கெட் சரிந்தது. அடுத்து வந்த விராட் கோலியும் ஹென்றியின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் 4 பந்துகளைச் சந்தித்து ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். ஒரே போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் டக் அவுட் ஆனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யரும் மேட் ஹென்றியின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து மோசமான தொடக்கத்தைச் சந்தித்தது. இதற்கிடையே நான்காவது விக்கெட்டாக ருதுராஜ் கெயிக்வாட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 334 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி, ஆரம்பத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்து கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.