மதுரை மாவட்டம் செக்காணூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையக் கழிவறையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவர் கம்பத்தில் இருந்து லாரியில் ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது, வழியில் திடீரென லாரி தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் புகார் அளிப்பதற்காக பாலகிருஷ்ணன் செக்காணூரணி காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அவர் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவரைக் காவல் நிலையத்திலேயே தங்க வைக்குமாறு தேனி போலீசார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், லாரி தீப்பிடித்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக அதன் உரிமையாளரும் புகார் அளித்ததாகத் தெரிகிறது.
Advertisement
இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன், இரவு நேரத்தில் அங்குள்ள கழிவறையில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவருக்கு வேறு ஏதேனும் நெருக்கடி கொடுக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அவரது உயிரிழப்புக்கான காரணம் உறுதியாகத் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என தென் மண்டல ஐஜி விஜேயந்திர பிதாரி தெரிவித்துள்ளார்.