சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, முதல்-அமைச்சர் விஜய் திமுக ஆட்சிக்காலம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அவர் குறிப்பிட்டு திமுகவினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்று விஜய் தெரிவித்தார். மிசா குறித்து பேசும்போது, மு.க.ஸ்டாலினை சைகை மூலம் கேலி செய்யும் வகையில் விஜய் உடல்மொழியை பயன்படுத்தியதாக திமுகவினர் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கடந்த 12-ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
Advertisement
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பங்கேற்று, முதல்-அமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதாகக் கூறி ஆ.ராசா மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் அவமதித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.