மீண்டும் பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு: பொதுக்குழுவில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளராக ச. வடிவேல் இராவணனும், பொருளாளராக ம. திலகபாமாவும் மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர்.சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த நிலையில், தேர்தலுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்தனர்.பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளூயன்ஸ் அரங்கில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மீண்டும் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கும் வடிவேல் இராவணன், திலகபாமா ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுக்குழுவில் மொத்தம் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், கட்சித் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிக்காலத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஓராண்டுக்கு நீட்டித்திருந்தது. அந்த நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதியுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, கட்சி அமைப்பு விதிகளின்படி புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாவட்டம், ஒன்றியம், மாநகரம், நகரம், பேரூர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் அமைப்புத் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன. மாநில அளவிலான பதவிகளுக்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளர் பதவிக்கு வடிவேல் இராவணன், பொருளாளர் பதவிக்கு திலகபாமா ஆகியோர் மட்டுமே மனுத்தாக்கல் செய்ததால், அவர்கள் மூவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கட்சியின் அமைப்புத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.பொதுக்குழு கூட்டத்தில், அவர்களின் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதுடன், கட்சிப் பணிகளில் சிறந்து செயல்பட வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.அன்புமணி ராமதாஸ் கடந்த ஆண்டு ஜூலை 25 முதல் நவம்பர் 9 வரை 109 நாட்கள் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட "தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்" ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்ததாக பொதுக்குழு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் அலை பா.ம.க. வலுவாக உள்ள மாவட்டங்களில் தாக்கம் ஏற்படுத்தாமல் தடுக்கப்பட்டதற்கு அன்புமணியின் முயற்சியே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிராக அவர் மேற்கொண்ட நான்கு நாள் விழிப்புணர்வு பயணத்துக்கும் பொதுக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதை அதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையை பொதுக்குழு வெளிப்படுத்தியுள்ளது. முக்கிய தீர்மானங்கள் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் சமூகநீதி மற்றும் அரசியல் பணிகளை பொதுக்குழு பாராட்டி, அவரது 88-வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் தேசிய அளவில் இடஒதுக்கீடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமச்சீர் கல்வி, மருத்துவம், வேளாண்மை, நீர்ப்பாசனம் உள்ளிட்ட துறைகளில் அவர் செய்த பணிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என அறிவித்த முதலமைச்சர் விஜய் மற்றும் அதற்காக வலியுறுத்திய அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.