தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டு வருகிறார் மாணவர் பாரதிதாசன். கடந்த சில மாதங்களாக தனக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை என்றும், இதனால் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கவலை தெரிவித்து, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: மாணவர் பாரதிதாசனுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கு தவெக அரசு இத்தனை கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
2026-ஆம் ஆண்டிலும் கல்விக்காக ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்பட்டால், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற நிலையை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் நோக்கத்தையே அரசு சிதைத்துவிட்டதாக கருத வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசு தனது பொறுப்பில் இருந்து விலகினாலும், ஒரு மாணவரின் கல்விக் கனவு அரசின் பிடிவாதத்தால் பாதிக்கப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் கனிமொழி கூறியுள்ளார். மேலும், பாரதிதாசனின் கல்விக்கு தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் தொடர்ந்து உறுதுணையாக இருப்பார்கள் என அண்ணன் தளபதி உறுதியளித்துள்ளதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.