மத்திய வரி பகிர்வில் தமிழ்நாட்டின் உரிமை உறுதி செய்ய வேண்டும்; சட்டசபையில் அரசின் தனித்தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக சட்டசபையில் இன்று, மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பங்கை உறுதி செய்ய வலியுறுத்தும் அரசின் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.இந்த தீர்மானத்தை நிதி அமைச்சர் மரிய வில்சன் முன்மொழிந்து பேசினார். அப்போது, இந்திய அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ள நிதிசார் கூட்டாட்சிக் கொள்கைகளின் அடிப்படையில், மாநிலங்கள் தங்களின் அரசியலமைப்புச் செயல்பாடுகளை திறம்பட மேற்கொள்ள நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு அவசியம் என அவர் குறிப்பிட்டார்.தமிழ்நாடு தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி நிர்வாகம் மற்றும் மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி தேசிய பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை வகித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.மத்திய வரிகளின் பகிர்வு சமத்துவம், சம உரிமை, நிதி முயற்சி, நல்லாட்சி திறன் மற்றும் மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் என்றும், மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும், இந்திய அரசியலமைப்பின் நிதிசார் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு ஏற்ப, மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை சட்டசபை வலியுறுத்தியுள்ளது.அதேபோல், மாநிலங்களின் பொருளாதார பங்களிப்பு, நிதி ஒழுங்கு, நல்லாட்சி திறன் மற்றும் வளர்ச்சித் தேவைகளை கருத்தில் கொண்டு, வெளிப்படையான, பாரபட்சமற்ற மற்றும் சமமான வரிப் பகிர்வு நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் மாநிலங்கள் பெற்றுள்ள முன்னேற்றம் காரணமாக, வரிப் பகிர்வு அளவுகோல்கள் எந்த மாநிலத்திற்கும் பாதகமாக அமையக் கூடாது என்றும், எதிர்கால நிதிப் பகிர்வு ஏற்பாடுகளில் தமிழ்நாட்டின் நியாயமான நிதி நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.தீர்மானத்தின் மீது பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, மாநிலங்களுக்கு மத்திய வரி வருவாயில் 50 சதவீத பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற அம்சத்தைத் தீர்மானத்தில் தெளிவாக சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், "மாநில அரசுகளின் வலிமையே மத்திய அரசின் வலிமை" என்ற பேரறிஞர் அண்ணாவின் கருத்தை நினைவுபடுத்திய அவர், நிதி ஆயோக் கூட்டங்களில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துரைத்ததாகவும் கூறினார்.இதனைத் தொடர்ந்து, அரசின் தனித்தீர்மானத்திற்கு அதிமுக முழுமையான ஆதரவை அறிவித்தது. நிதிப் பகிர்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், வரிப் பகிர்வு முறையில் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்றும் அவைத் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.அனைத்து கட்சிகளும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சியளிப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். தொடர்ந்து, அமைச்சர் மரிய வில்சன் முன்வைத்த அரசின் தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.