மதுரையில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியில் அண்ணாமலை; மரக்கன்றுகளும் நட்டார்
‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை, மதுரையில் வைகை ஆற்றங்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணி மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வில் பங்கேற்றதாக தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘சுத்தமான, வளமான தமிழகம்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, மதுரையின் அடையாளமாகவும், மக்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய வைகை நதிக்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணிகளில் ‘வி த லீடர்ஸ்’ அமைப்பினர் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.திங்கள்கிழமை காலை என்றாலும், ஏராளமான தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்று அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாகவும், அவர்களின் சமூக அக்கறையே இயக்கத்தின் மிகப்பெரிய பலம் என்றும் அண்ணாமலை பாராட்டியுள்ளார்.மேலும், வைகை என்பது ஒரு சாதாரண நதி அல்ல; மதுரை மாநகரின் உயிர்நாடியாகவும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த மண்ணின் நாகரிகம், விவசாயம் மற்றும் ஆன்மிக மரபை தாங்கி நிற்கும் முக்கிய நதியாகவும் விளங்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.வைகையை தூய்மையாக பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என்றும், நதிகளை பாதுகாப்பது என்பது சுற்றுச்சூழலை மட்டுமல்லாமல், பண்பாடு, வரலாறு மற்றும் வாழ்வாதாரத்தையும் காக்கும் செயலாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், வைகை ஆற்றில் பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகளை கொட்டாமல் பாதுகாக்க வேண்டும் என்றும், வருங்கால சந்ததியினருக்காக தூய்மையான வைகையை விட்டுச் செல்ல அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
அதேபோல், ‘சுத்தமான, வளமான தமிழகம்’ என்ற இலக்கை மக்கள் இயக்கமாக மாற்றி, பசுமையும் தூய்மையும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்க மதுரை மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.