மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். மதுராந்தகம் தொகுதியில் 5 முனை போட்டி நிலவுவதால், பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் அங்கு முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொகுதி முழுவதும் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையொட்டி, இந்த வாரத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரு தொகுதிகளிலும் நேரடியாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
Advertisement
அதன் ஒரு பகுதியாக, மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பல்வேறு நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நேற்றுவரை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. வரும் செவ்வாய்க்கிழமை (6-ந்தேதி) இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.