மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஆகஸ்ட் 18) காலை 8 மணி நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு 12,350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.காவிரி மேலாண்மை வாரியம் கடந்த 15-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் 12 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கபினி அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2,298 கன அடியும் என மொத்தம் 12,298 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 9,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 6 மணிக்கு 12,500 கன அடியாக உயர்ந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.அதேபோல், ஐந்தருவி, மெயின் அருவி, சினிப்பால்ஸ் உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.