பெங்களூரு மெட்ரோ ரெயில் இளஞ்சிவப்பு வழித்தடத்தில் ஆக.12-ல் சோதனை ஓட்டம்
பெங்களூருவில் கோலன அக்ரஹாரா முதல் நாகவரா வரையிலான இளஞ்சிவப்பு வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்க உள்ளது.
பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய போக்குவரத்து வசதியாக மெட்ரோ ரெயில் சேவை செயல்பட்டு வருகிறது. தற்போது செல்ல கட்டா-ஒயிட்பீல்டு இடையே ஊதா நிற வழித்தடத்திலும், மாதவரா-சில்க் நிறுவனம் இடையே பசுமை வழித்தடத்திலும், பொம்மசந்திரா-ஆர்.வி.ரோடு இடையே மஞ்சள் வழித்தடத்திலும் என மொத்தம் 96 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சுமார் 10 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்து வருகின்றனர்.இந்த நிலையில், காலேன அக்ரஹாரா முதல் நாகவரா வரையிலான 21.3 கிலோமீட்டர் நீளமுள்ள இளஞ்சிவப்பு வழித்தடத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதில் 7.5 கிலோமீட்டர் உயர்மட்ட பாதையாகவும், 13.8 கிலோமீட்டர் பூமிக்கடிப் பாதையாகவும் அமைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை செய்ய பி.எம்.ஆர்.சி.எல். அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஆகஸ்ட் 12-ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. ரெயில்வே பாதுகாப்பு தலைமை கமிஷனர் இந்த சோதனையை மேற்கொள்ள உள்ளார். இந்த சோதனை ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது.சோதனை ஓட்டம் முடிந்த பிறகு பாதுகாப்பு கமிஷனர் சான்றிதழ் வழங்க வேண்டும். அதன் பின்னர், வரும் செப்டம்பர் மாதம் முதல் இளஞ்சிவப்பு வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.