விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், 45 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் தெருவைச் சேர்ந்தவர் முருகன். திருமண மண்டபம் நடத்தி வரும் இவர், சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இதனால் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் அங்கு சென்று கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவைத் திறந்து, அதில் வைக்கப்பட்டிருந்த 45 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. வெளியூர் சென்றிருந்த முருகனும், அவரது குடும்பத்தினரும் சனிக்கிழமையான இன்று வீட்டுக்குத் திரும்பியுள்ளனர்.
Advertisement
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது நகைகள் மற்றும் பணம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் உதவியுடனும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். கொள்ளை நடைபெற்ற சரியான நேரத்தையும், இதில் தொடர்புடையவர்களையும் கண்டறியும் வகையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.