பிரான்சில் சூறாவளி தாக்குதல்: கர்ப்பிணி பெண் உட்பட 41 பேர் காயம்
பிரான்சின் தென்மேற்கு பகுதியில் வீசிய சக்திவாய்ந்த சூறாவளியில் கர்ப்பிணி பெண் உட்பட 41 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தென்மேற்கு பிரான்சில் அமைந்துள்ள பொமாஸ் கிராமத்தில் சுமார் 1,000 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் மணிக்கு 117 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் சூறாவளி வீசியது. இதனால் கிராமத்தில் பலத்தசேதம்ஏற்பட்டது.சூறாவளியின் தாக்கத்தில் பல வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. சுமார் 300 வீடுகள் சேதமடைந்த நிலையில், மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் சில வீடுகள் இடிந்து விழுந்ததுடன், ஏராளமான வாகனங்களும் சேதமடைந்தன.மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
அவர்களின் நடவடிக்கையின் மூலம் காயமடைந்த 41 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் கர்ப்பிணி பெண் உட்பட 15 பேர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதனிடையே, பைரனீஸ் மலைப்பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்ததால், தென்மேற்கு பிரான்ஸ் மாகாணத்தில் நடைபெற இருந்த வுல்டா எஸ்பானா சைக்கிள் பந்தயம் ரத்து செய்யப்பட்டது. போர்டோ, மார்சேய், நைஸ், துலூஸ் உள்ளிட்ட நகரங்களிலும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.