பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த விமானி மற்றும் துணை விமானி என இரு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள ராணுவ முகாமில் இன்று மதியம் சிறிய ரக ராணுவ விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அந்த விமானத்தில் விமானி மற்றும் துணை விமானி என இரண்டு ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். அப்போது, பலூசிஸ்தான் மாகாணத்தின் குவாட்டா நகரில் உள்ள நவன் கில்லி பகுதியில் பறந்துகொண்டிருந்த விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்தது.
Advertisement
மோதிய வேகத்தில் விமானம் தீப்பற்றி எரிந்ததில், அதில் இருந்த இரு வீரர்களும் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர், உயிரிழந்த வீரர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும், விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.